சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்யவே பொது மக்கள் அஞ்சுகின்றனர்: விஜயகாந்த்

திங்கள், 27 ஜூலை 2015 (23:54 IST)
சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்யவே பொது மக்கள் அஞ்சுகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் துவங்கப்பட்ட போது அனைத்து தரப்பினரும் முழுமனதோடு அதை வரவேற்றார்கள். ஆனால் அந்த திட்டத்தை சட்ட மன்றத்தில் நிராகரித்து பேசிவிட்டு, அதிமுக ஆட்சியில் நான் தான் கொண்டுவந்தேன் என்று தற்போது சுயதம்பட்டம் அடித்துக் கொண்டும், அதற்கு உரிமை கொண்டாடியும் அள்ளித் தெளித்த அவசர கோலத்தில், இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்துள்ளார் என்ற ஐயம் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.
 
காரணம், மின்கசிவால் உடல்கருகி மெட்ரோ ஊழியர் உயிருக்கு போராடுவதும், தண்டவாளம் விழுந்து கார் நொறுங்கிப் போவதும், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பதும் என தொடர் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
 
கடந்த சிலநாட்களாக பெய்த மழையில் மெட்ரோ இரயில் பாதைகளில் மழைநீர் தேங்கி, அதனால் சில இடங்களில் இரயில் பாதைகள் கீழே இறங்கியுள்ளதாகவும், பல இடங்களில் மின்கம்பிகளில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், கண்ட்ரோல்ரூம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் உட்புகுந்து சேதம் ஏற்பட்டதாகவும், அதனால் மெட்ரோ இரயில் போக்குவரத்து பல மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதனால் மெட்ரோ இரயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
 
மேலும், மெட்ரோ இரயில் பணியால் பல பாதிப்புகள் ஏற்படுவதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சுரங்க இரயில் பாதை அமைக்கப்படும் வழித்தடங்களில் உள்ள கட்டிடங்கள் திடீர் திடீரென பூமிக்குள் இறங்குவதும், விரிசல்கள் ஏற்பட்டு இடிந்தும் விழுகின்றன.
 
சென்னைல் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் மோசமான சாலைக்குகீழே மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறுவதால் சாலைகளில் விரிசல்களும், பள்ளங்களும் ஏற்பட்டு வாகனங்கள் விபத்திற்குள்ளாவதும், நடந்து செல்வதற்கே முடியாத நிலையும் உள்ளது. இதனால் பொது மக்கள்தான் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றார்கள்.
 
எனவே, அதிமுக அரசு மெட்ரோ இரயில் திட்டத்தை மேம்படுத்தி, ஆமை வேகத்தில் செல்லும், மெட்ரோ இரயில் பணியில் சிறப்பு கவனம் செலுத்தி, அதை எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு விரைவுபடுத்தி, விபத்துகள் இல்லாத வகையில் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்