அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு; அதிமுகவினர் திணறல்

வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (12:08 IST)
கடலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
 

 
5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தும் கடலூர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, வெள்ள நிவாரணம் கூட அனைவருக்கும் வழங்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் ஒன்றியம் சிங்கிடிகுரியில் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடங்கிய இடத்திலேயே அவரது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் செல்லும் இடமெல்லாம் சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் பணத்தால் சரிசெய்து வருகின்றனர்.
 
செவ்வாய்க்கிழமை இரவு கடலூர் நகரம் முழுவதும் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பதட்டம் அடைந்த அதிமுகவினர் இரவு முழுவதும் அந்த சுவரொட்டியை கிழித்து எறிந்தனர்.
 
புதன்கிழமை கடலூர் புதுக்குப்பத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அப்பகுதி மக்களுக்கும் சம்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுவரையில் எங்கள் பகுதியை எட்டிப்பார்க்காமல் எப்படி ஓட்டு கேட்டு வருவீங்க, என்று கேட்டனர்.
 
இதனால் கோபமடைந்த மீனவரணி செயலாளர் தங்கமணி பொதுமக்களை நெட்டித்தள்ளி, சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். மேலும் கடுமையான வார்த்தை கூறித் திட்டியுள்ளார். இதனால் அதிமுகவினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்