19 சதவீத மக்கள் ; 81 சதவீத கட்சியினர் ; ஓ.பி.எஸ் போராட்டத்தில் பங்கேற்பு - சசிகலா அதிர்ச்சி

வியாழன், 9 மார்ச் 2017 (10:04 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டது சசிகலா தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் நேற்று காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். 
 
இந்த போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியவறை அதிக அளவில் பங்கேற்க வைக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.  பொதுமக்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ‘எழுவோம்; வெல்வோம்’ என்கிற தலைப்பில் சமூக வலைதளங்களில் விளம்பரமும் செய்யப்பட்டது. 
 
ஆனால், அவர்களின் போராட்டத்தின் போது கூட்டம் கூடுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் சசிகலா தரப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. உண்ணாவிரதத்தில் கட்சியினர் பங்கேற்பதை தடுக்கும் படி அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. மேலும், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்வதை தடுப்பதற்காக, மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் அதிமுக நிர்வாகிகள் நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்ற சில விழாக்களில் கலந்து கொண்டார்.
 
மேலும், உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்காமல் போலீசர் இழுத்தடித்து வந்தனர். ஆனால், அனுமதி மறுத்தால், ஓ.பி.எஸ் அணி நீதிமன்றத்திற்கு செல்லும். தமிழக அரசின் தலையில் நீதிமன்றம் குட்டும் என்பதை உணர்ந்த அரசு, ஓ.பி.எஸ் அணிக்கு அனுமதி அளித்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டதில் 19 சதவீத பொதுமக்களும், 81 சதவீத கட்சியினரும் கலந்து கொண்டதாக ஓ.பி.எஸ் அணி தெரிவித்துள்ளது. ஒரிரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகமாக கலந்து கொண்டது, ஓ.பி.எஸ் அணிக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. ஆனால், சசிகலா தரப்பினருக்கு இந்த விவகாரம் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்