ஆம்னி பேருந்துக்கும் அரசுக்கும் இடையே மோதல்.! அல்லல்படும் பயணிகள்.!!

Senthil Velan

வியாழன், 25 ஜனவரி 2024 (09:52 IST)
தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தப்படுவதால் சென்னைக்கு வரும் பயணிகள் போதிய பேருந்து கிடைக்காததால் அவதி அடைந்து வருகின்றனர்.
 
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், போக்குவரத்து துறை இடையிலான மோதல் நேற்று உச்சகட்டத்தை எட்டியது.  ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்திருந்தது.

ஆனால்  கிளாம்பாக்கத்தில் போதிய வசதி இல்லாததால் சென்னையில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது.
 
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளை போலீசார் தடுத்து நிறுத்தி, கிளாம்பாக்கத்திலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.  இதனால் சென்னைக்கு வரும் பயணிகள், போதிய பேருந்து வசதி இல்லாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து அரசு முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்றும் சென்னைக்கு செல்லும் தனியார் பேருந்துகளை பாதி வழியில் தடுத்து நிறுத்தி, தங்களை பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளிவிட்டதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றி செல்ல ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து சென்னையில் இருந்து செல்ல இருந்த பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்