தேசியக்கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நகராட்சித் தலைவர் : சென்னையில் பரபரப்பு

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (09:50 IST)
பல்லாவரம் நகராட்சி தலைவர்,  சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அன்று பல இடங்களில் இந்தியாவின் தேசியக் கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி தலைவர் கே.எம்.ஆர்.நிஷார் அகமது தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிஷார் அகமது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதியிப் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இருந்தவர். ஆனால், சில புகார்கள் காரணமாக அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. சி.ஆர்.சரஸ்வதிக்கு சீட் கொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில், சுதந்திரதினமன்று அவர் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். ஆனால், கொடி தலைகீழாக இருப்பதை பார்த்து சிலர் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் சுதாரித்த அவர், கொடியை கீழே இறக்கி அதை சரிசெய்து மீண்டும் ஏற்றியிருக்கிறார். 
 
அதற்குள் அந்த கொடியை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவிட்டனர். அந்த புகைப்படம் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்