ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு: போராட்டத்தை கைவிட முதல்வர் கோரிக்கை!

வெள்ளி, 20 ஜனவரி 2017 (08:44 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.


 
 
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை ஜல்லிக்கட்டு தொடர்பாக சந்தித்து பேசினார் முதல்வர் பன்னீர்செல்வம். அப்பொழுது ஜல்லிகட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதே நேரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என பிரதமர் கூறினார்.
 
இதனையடுத்து தமிழக அரசின் நடவடிக்கையை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதன் பின்னர் உடனடியாக தமிழகம் திரும்பாத முதல்வர் பன்னீர்செல்வம் மாநில அரசு அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிகளை டெல்லியில் இருந்து ஆராய்ந்து இன்று அவசர சட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க இருப்பதாகவும், அதற்கான நடைமுறைகள் சில இருப்பதால் இன்னும் சில தினங்களில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். எனவே மாணவர்கள், இளைஞர்கள் என போராட்டத்தை நடத்தும் அனைவரும் போராட்டத்தை கைவிட முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்