கட்சி சின்னத்தை முடக்கிய பழனிசாமிக்கு கண்டனம்! – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்!

சனி, 2 ஜூலை 2022 (09:56 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியுள்ள நிலையில் கட்சி சின்னத்தை முடக்கியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து ஓபிஎஸ் பெயரை நமது அம்மா நாளிதழில் இருந்து நீக்கியதோடு, அவரது ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் முடிந்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி அணி கூறிவருகிறது. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போட வேண்டியது இருந்ததாக கூறப்படுகிறது.

அதில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடவில்லை என்றும், அதனால் தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேட்சையாக சின்னங்களை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் “ஓபிஎஸ் கையெழுத்து போட அழைத்தும், கையெழுத்து போட மறுத்து புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்” என அதில் வாசகங்களை இடம்பெற செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்