மாணவர்கள் மீது தாக்குதல் - முதல்வருக்கே தெரியாமல் நடந்ததா?

புதன், 25 ஜனவரி 2017 (16:09 IST)
ஜல்லிக்கட்டு வேண்டி அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். 
 
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். 


 

 
முக்கியமாக சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த ஏராளமான இளைஞர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இது கேள்விபட்டு, திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்காக, மெரினா கடற்கரை நோக்கி வந்தனர்.  
 
ஆனால், அவர்களை வரவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாரும் அவர்களை திருப்பி தாக்கினர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது. அதைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மயிலாப்பூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோதல் எழுந்தது. அதில் பலர் தாக்கப்படனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.


 

 
கலவரத்தில் ஈடுபட்டதாக மீனவ சமூகத்தை சார்ந்த ஏராளமானோரை, காவல்துறை தேடி தேடி கைது செய்து வருகின்றனர். அதில் பல அப்பாவிகளும் சிக்கியுள்ளனர்.
 
இந்நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முதல்வர் ஓ.பி.எஸ் உத்தரவிடவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, அவசர சட்டம் கொண்டு வந்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியுள்ளார் ஓ.பி.எஸ். இதனை பிடிக்காத, சகித்துக்கொள்ள முடியாத அதிகாரத்திற்கு ஆசைப்படும் கும்பல்,  அவர் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்து இந்த வெறியாட்டத்தை தொடங்கி வைத்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 


 

 
இது தொடர்பாக, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ், யாருடைய உத்தரவின் பேரில் போலீசார் இப்படி கொடூரமான தாக்குதலை நடத்தினர் என கொந்தளித்ததாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்