நீ எல்லாம் எனக்கு அழைப்பு விடுப்பதா?: தினகரனை காய்ச்சி எடுத்த ஓபிஎஸ்!

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (17:54 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர்.


 
 
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
 
குடும்ப இயக்கத்தை எதிர்த்து வளர்ந்த அதிமுக எப்போதும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட கூடாது. தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததே கழக சட்ட விதிகளுக்கு புறம்பானது. அவர் நியமிக்கப்பட்டதும், அவரால் நியமிக்கப்பட்ட உத்தரவும் செல்லாது. அவர் சிலரை நீக்கியதும் செல்லாது.
 
நிரந்தர பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜெயலலிதா தான் பொதுச்செயலாளர். அதுவரை அந்த பொறுப்பில் அமர யாருக்கும் தகுதி இல்லை. ஜெயலலிதா உயிரிழக்கும் வரை கழக உறுப்பினராக இல்லாதவர் எல்லாம், எனக்கு அழைப்பு விடுப்பதா. அவர் எப்படி துணைப் பொதுச்செயலாளர் ஆக முடியும் என கடுமையாக விமர்சித்தார் பன்னீர்செல்வம்.
 
நேற்று அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓபிஎஸ் இன்று பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்