மேகதாதுவில் கர்நாடகா அணை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த சட்டசபையில் தனித் தீர்மானம்

வெள்ளி, 27 மார்ச் 2015 (14:31 IST)
கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.
 
அதில்," காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் படி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மாதாந்திர வாரியாகப் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும்.
 
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதையும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவிரி நீர்வாரி நிகமம் வாயிலாக மேற்கொள்ளவுள்ள திட்டங்களையும், தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
 
காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்துக்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முனையக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும்.
 
கடந்த 5.12.2014 அன்று இந்த மாமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு தனது நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
கர்நாடக அரசு, மேகேதாட்டு நீர்மின் திட்டம் மற்றும் வேறு பல திட்டங்களை எடுத்துக் கொள்வதை நிறுத்தி வைக்கும்படி கர்நாடகத்திற்கு அறிவுரை வழங்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2.9.2013 அன்று கடிதம் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
 
இதேபோல், கர்நாடக அரசு, காவிரி நீரவாரி நிகமம் என்ற அமைப்பின் மூலமாக, பல நவீனமயமாக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க, கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி பிரதமருக்கு 3.9.2013 அன்று கடிதம் அனுப்பினார்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தமிழகத்தின் அனுமதியில்லாமலும் இத்திட்டங்களை கர்நாடகம் மேற்கொள்ள தடை விதிக்க கோரியும், மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தற்போதைய நிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்கவும் கோரி ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் 11.4.2014 அன்று தமிழக அரசு தாக்கல் செய்தது.
 
மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்ட தொழில் நுட்ப சாத்திய அறிக்கை தயார் செய்வதற்காக கர்நாடக அரசின் விருப்பம் கோரும் அறிவிப்பை நிறுத்தி வைத்திடவும் குடிநீர் வழங்கல் என்ற போர்வையின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கவும் 12.11.2014 அன்று நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.
 
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று இடைக்கால மனு ஒன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
 
மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசு தனது 2015.2016 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்ததை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல், எந்த திட்டத்தையும் கர்நாடகம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்க 21.3.2015 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.
 
இது தொடர்பாக 26.3.2015 அன்று மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததது.
 
இத்தகைய நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுதலையும், நன்றியையும் இந்த மாமான்றம் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது.
 
மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகத்தால் தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்; காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகேதாட்டுவில் அணை, நீர்த்தேக்கம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்; காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்புப்  போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இத்தைய தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்