கர்நாடக அரசின் தவறால் சசிகலா விடுதலையாக வாய்ப்பு: சு. சுவாமி அதிரடி டுவீட்!

வியாழன், 6 ஏப்ரல் 2017 (17:09 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விடுதலை ஆவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கின் முதல் புகார் தாரரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தற்போது உயிருடன் இல்லாததால் அவருக்கான தண்டனை நீக்கப்படுகிறது உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
 
இருப்பினும் அவருக்கான அபராதம் 100 கோடியை வசூலிப்பது எப்படி என்பது குறித்து மறு சீராய்வு மனு போட்டு நீதிமன்றத்தை நாடியது கர்நாடக அரசு. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கான தண்டனை நீக்கப்பட்டுவிட்டது, சட்டத்தின் படி அவர் குற்றவாளி இல்லை என்பது போன்ற கருத்தை கூறி கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.


 
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா குறித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்து தவறு செய்துள்ளது. இதனால் தற்போது சசிகலா விடுதலை ஆவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டது என கூறியுள்ளார்.


 
 
அதாவது சசிகலா மீது கூட்டு சதி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளி உயிருடன் இல்லை, குற்றவாளி இல்லை, அவர் விடுதலை என்றால் அங்கே எப்படி கூட்டு சதி நடந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

வெப்துனியாவைப் படிக்கவும்