சசிகலாவுக்கு கர்நாடக சிறைதான் கதி; உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை: கர்நாடக புலனாய்வு துறை

திங்கள், 20 பிப்ரவரி 2017 (16:38 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என கர்நாடக உளவுத்துறை போலீசார் கூறியுள்ளனர். இதனால் அவரை தமிழக சிறைக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14-ஆம் தேதி சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அதிமுக முயற்சி செய்வதாக தகவல்கள் வருகின்றன.
 
இதனையடுத்து கர்நாடக புலனாய்வுத்துறை சசிகலா உயிருக்கு ஆபத்து உள்ளதா என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
 
சிறையின் உள் இருக்கும் கைதிகளால் கூட சசிகலாவுக்கு எந்த இடையூறும் இல்லை என குறிப்பிட்டு சசிகலாவின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. மேற்கொண்டு சசிகலா தரப்பு பாதுகாப்பு இல்லை என கூறி நீதிமன்றம் சென்றால் அதனை எதிர்த்து கர்நாடக அரசு சசிகலா தரப்பில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் எனவும் தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்