”கைய வச்சி பாருங்க” மெரினாவில் மிரட்டும் மாணவர்கள்!!

வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:40 IST)
மெரினாவில் உணர்ச்சி பெருக்கில் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ஆயுதப்படை காவலர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று காவல் துணை ஆணையர் உறுதி அளித்துள்ளார்.


 
 
மெரினாவில் இன்று நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. 
 
அப்போது, இன்றைய போராட்டத்தில் காவலர் சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் போராட்டக்காரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் என்றும், இன்னும் போராட நிறைய இருக்கிறது என்றார். இப்படி பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை என்றும், இங்கு பணியில் இருக்கும் காவலர்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் தான் என்றும் கூறினார்.
 
மேலும், தமிழர்களிடம் உள்ள ஒரு கெட்டப்பழக்கம் என்னவென்றால், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் அவரை உயர் அதிகாரிகள் வந்து அழைத்து சென்றனர்.
 
இந்நிலையில் உணர்வுபூர்வமாக பேசிய ஆயுதப்படை காவலர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் மாணவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்