திருப்பூரில் தொழிலதிபரின் மகள் வரதட்சணை கொடுமையாக தற்கொலை செய்த அதிர்ச்சி மறைவதற்குள் திருவள்ளூரில் புதுப்பெண் திருமணமான நான்கே நாளில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் உள்ள முஸ்லீம் நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் லோகேஷ்வரி. இவருக்கும் பன்னீர் என்ற நபருக்கும் கடந்த ஜூன் 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது. லோகேஷ்வரியின் பெற்றோர் தங்கள் சக்திக்கு முடிந்த சீர் வரிசைகள், வரதட்சணையை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு மணமகன் வீடு சென்ற லோகேஷ்வரி நேற்று மறுவீடு அழைப்பிற்காக தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். ஆரம்பம் முதலே முகம் வாட்டமாக காணப்பட்ட லோகேஷ்வரி யாரும் கவனிக்காத நேரத்தில் தூக்குப் போட்டு தாய் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் லோகேஷ்வரி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தார் இரு சக்கர வாகனம், ஏசி மற்றும் கூடுதல் தங்க நகைகள் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனால்தான் லோகேஷ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வரதட்சணை கொடுமையினால் மணப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K