சசி முதலமைச்சர்; நான் பொதுச்செயலாளர்: சூத்ரதாரியின் கனவு திட்டம்!

திங்கள், 26 டிசம்பர் 2016 (12:52 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக கட்சியில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. அந்த கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற போட்டி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


 
 
சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர். சில அமைச்சர்கள் சசிகலா முதலமைச்சராக வர பன்னீர்செல்வம் வழிவிட வேண்டும் என பகிரங்கமாக கூறி வருகின்றனர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சசிகலா பொதுச்செயலாளராக வர கூடாது என ஒருபக்கம் பலரும் கூறி வருகின்றனர். அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். சசிகலாவின் போஸ்டர்களை கிழிக்கின்றனர். இவையெல்லாம் அதிமுகவினரே செய்கின்றனர்.
 
சசிகலா பொதுச்செயலாளராக வர ஜெயலலிதா விரும்ப மாட்டார். அவரால் தான் ஜெயலலிதா ஜெயிலுக்கு போக நேரிட்டது, சசிகலா ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கவில்லை, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை அவரது குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். ஆனால் தற்போது அவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை அபகரிக்க பார்க்கிறார்கள் என பல குற்றச்சாட்டுகளை அதிமுக தொண்டர்கள் கூறிவருகின்றனர்.
 
ஜெயலலிதா மரணமடைந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா இன்னமும் விடுதலையாகவில்லை. எனவே இந்த சூழ்நிலையில் கட்சியை தக்க வைக்க நடராஜன் ஒரு ஆலோசனையை சசிகலாவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
தமிழகத்தின் முதலமைச்சராக நீ பொறுப்பேற்றுக்கொள். நான் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொள்கிறேன். சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் கட்சி நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சசிகலாவிற்கு நடராஜன் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையை சசிகலா ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்