தினகரனால் வாழ்வு பெற்ற அடிமைகள்; நேரில் நிற்க தகுதி இல்லாதவர்கள்: நாஞ்சில் சம்பத் அதிரடி!

வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:35 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை நீடித்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். தினமும் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
 
தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ஒரே அணியாக உள்ளனர். அவர்கள் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் வசம் வைத்துள்ளனர். தினகரன், சசிகலாவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து செயல்படுகின்றனர். ஆனால் தினகரன் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு மீண்டும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
 
எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் எனவும், எங்களால் எல்லா பதவியையும் பெற்றுவிட்டு தற்போது நன்றியை மறந்து விசுவாசம் இல்லாமல் இருந்து வருவதாக தினகரன் தரப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
 
வரும் 8-ஆம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டத்தில் முதன் முதலாக தினகரன் கலந்துகொள்ள தனி ஆளாக செல்ல உள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் தனது பேட்டியில், சசிகலா, தினகரனால் அரசியலில் வாழ்வு பெற்ற இந்த அடிமைகள் இன்றைக்கு ஆரவாரம் செய்கிறார்கள். இவர்கள் தினகரனுக்கு நேருக்கு நேராக நிற்கிற தகுதியே இல்லாதவர்கள். அச்சத்தில் உறைந்து கிடக்கும் இந்த அடிமைகளின் புலம்பலை 8-ஆம் தேதி நாம் கேட்க போகிறோம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்