டிடிவி தினகரன் கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கியதால் அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், நேற்று முந்தினம் அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை. அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநிநாயத்தை என்னால் தாங்க முடியாது. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் பேசியபோது, அண்ணாவையும், திராவிடத்தையும் அவமதிக்கவில்லை, நாஞ்சில் சம்பத் அமைப்பிலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று பேசினார்.
“இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.
அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால் தான் கவலையோடு வெளியேறினேன்” என்று பதிவிட்டுள்ளார்.