வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்! – அமைச்சர் கோரிக்கை!

வியாழன், 2 நவம்பர் 2023 (09:04 IST)
வணிக வளாகங்கள் மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு  தமிழில் பெயர் வைக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தல்


 
கோவை வ.உ.சி. மைதானத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "இதழாளர் கலைஞர்" என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்:

இதழாளராக தனது பணியை மேற்கொண்டு  ஜனநாயகத்தின் நான்காவது தூணான  பத்திரிக்கை தர்மத்தை சிறப்பாக காப்பாற்றியவர் கலைஞர் என்றார்.

அரசியல் களத்தில் பத்திரிக்கையாளராக செயல்பட்ட அவர் தொட்ட அனைத்து துறைகளிலும் உச்சம் கண்டவர் எனவும்  முதன் முதலில் அவர்  தொட்ட துறை பத்திரிக்கை துறை என்பதால் இதழாளர் கலைஞர் என்ற பெயரில் கோவையில் புகைப்பட கண்காட்சி மற்றும்  கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக வருகிற 21-ந் தேதி கோவை இந்துஸ்தான் கலை  அறிவியல் கல்லூரியில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்த  மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி  மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாகவும்  அவர்களுக்கு உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும்  வணிக வளாகங்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் தமிழ் பெயர்கள் வைக்க வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் இதை தொழிலாளர் துறையுடன் இணைந்து தமிழ் வளர்ச்சித் துறை கண்காணித்து வருகிறது என்றும்  இதுதொடர்பாக ஓரிரு நாளில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

இதேபோல் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதாகவும்  அமெரிக்க நாட்டில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 5 கோடி ரூபாயை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்ததாகவும் மத்திய அரசு அனுமதி வந்தவுடன் அங்கு சென்று தொடக்கி வைக்க உள்ளோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்