கஞ்சா வியாபாரியுடன் கறி விருந்து; வசமாய் சிக்கிய இன்ஸ்பெக்டர்!

திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:06 IST)
நாகப்பட்டிணத்தில் பிடிபட்ட கஞ்சா வியாபாரியுடன் இன்ஸ்பெக்டர் பிரியாணி விருந்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணத்தில் முறைகேடாக கடல் அட்டைகள், கஞ்சா உள்ளிட்டவை படகுகள் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அவ்வபோது நடந்து வருகிறது. அடிக்கடி இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்தும் வருகின்றனர்.

சில நாட்கள் முன்னதாக கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை நாகப்பட்டிணம் வழியாக இலங்கை அனுப்ப ஒரு கும்பல் திட்டமிட்டது, இதையறித்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கஞ்சா வியாபாரியான சிலம்புசெல்வன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், 400 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதற்கு பிறகு கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்புசெல்வன் வீட்டில் சோதனை நடத்திய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான குழு சிலம்புசெல்வன் கஞ்சா கடத்தியதற்கான முக்கிய ஆதாரங்களை திரட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்பெக்டர் பெரியசாமி சொகுசு விடுதி ஒன்றில் கஞ்சா கடத்தல் குற்றவாளி சிலம்புசெல்வன் மற்றும் சிலருடன் அமர்ந்து பிரியாணி விருந்து உண்ணும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நாகை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்