நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தும் விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளனர். கமல் வரும் 21ஆம் தேதியும் மிக விரைவில் ரஜினியும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளனர். இந்த நிலையில் இருவரும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் ஈடுபடுவார்களா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன், ரஜினியின் போயஸ் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நட்புரீதியிலானது என்று கமல் கூறியிருந்தாலும் அரசியல் குறித்து நிச்சயம் இருவரும் பேசியிருப்பார்கள் என்றே கணிக்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசனின் பாணி வேறு. அதேபோல் தான் அரசியலிலும் இருக்கும். இருந்தாலும் இருவருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது' என்று கூறினார். இதிலிருந்தே இருவரும் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது
மேலும் அரசியல் பயணம் செய்யவுள்ள கமலுக்கு ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசியலுக்கு வரும் கமலுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்க தான் வேண்டுவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.