அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் - பட்டியலிடும் கருணாநிதி
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (15:32 IST)
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை 9,948 படுகொலைகளும், சுமார் ஒரு லட்சம் கொள்ளைகள், திருட்டுகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது என்று ஆளுநர் உரையிலானாலும், முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் உரைகளினாலும், திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்.
காவல்துறை அதிமுகவின் ஏவல் துறையாகி, எடுத்ததற்கெல்லாம் எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்து பிராண்டுவதும், ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கூடப் பொறுத்துக் கொள்ளாமல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களிடம் கூடத் தடியடி - கைது எனத் தர்பார் நடத்துவதும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிப்பதை மறந்து விட்டு "டாஸ்மாக்" கடைகளைப் பாதுகாப்பதும், ஆளுங்கட்சியினரை மட்டும் அரவணைப்பதும், அவர்களோடு கைகோர்த்துக் கொள்வதும், குற்ற நிகழ்வுகளில் புலனாய்வு செய்வதை விடுத்து அவற்றுக்கு மறைமுகமாகத் துணை போவதும் தான் இங்கே நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை 9,948 படுகொலைகளும், சுமார் ஒரு லட்சம் கொள்ளைகள், திருட்டுகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. கொலை மற்றும் கொள்ளையை மட்டும் எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் தினமும் சராசரியாக 7 கொலைகளும், 70 கொள்ளைகளும் நடந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அச்சமளிக்கும் வகையில் அதிகரித்துவிட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
முக்கிய கொலைகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் இந்த அரசு திறமையாகச் செயல்படவில்லை. திருச்சியில் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடைபெற்று எத்தனையோ மாதங்கள், ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 10ம் தேதி இந்தக் கொலை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு இறுதி வாய்ப்பாக இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறை அதிகமாக நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் புனியா குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தபின், ஆதி திராவிடர்களுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 213 கொலைகள் நடைபெற்றுள்ளன. 192 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அதே போன்று 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 118 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 6,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆதி திராவிடர்களுக்கு எதிராக வன்முறை அதிகமாக நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது தலைகுனிவைத் தரும் தகவலாகும்.
“பீரோ ஆப் போலீஸ் ரிசர்ச் அன்ட் டெவலப் மென்ட்” வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
இப்போது மட்டுமல்ல; 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த ஐந்தாண்டு காலத்தில் 180 அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது தொடுத்தார். தற்போது 2011 முதல் 2015ஆம் ஆண்டு முடிய உள்ள ஐந்தாண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
2016 மே 13ம் தேதி, தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட ரூ.570 கோடி குறித்து, சி.பி.ஐ. விசாரித்து எவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தர வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறதே, எந்தத் தேர்தலிலாவது இந்த முறை போல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? ஐந்து மாநிலங்களில் மொத்தம் 133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஒரு மாதக் காலத்தில்தான் எத்தனை கொள்ளைகள்? சேலத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 80 லட்சம் ரூபாயை இரவோடு இரவாகக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடைபெற்ற பெருமையும் இந்த ஆட்சிக்குத்தான் உண்டு.
இந்த கொள்ளைகளையும், கொலைகளையும் கண்டுபிடிக்காத காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டோ இல்லையோ, சென்னையில் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரி உடனடியாக ஒரே நாளில் ராமநாதபுரம் கடலோரக் காவல் படைக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், இவைதான் அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படும் லட்சணம்!” என்று கூறியுள்ளார்.