சிதம்பரத்தில் சகோதரர்கள் வெட்டிக் கொலை: தலைகள் கல்லூரி வாயிலில் கிடந்ததால் பரபரப்பு

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (19:18 IST)
சிதம்பரம் அண்ணாமலைநகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று வீடுபுகுந்து இருவரை வெட்டிக் கொலை செய்து, அவர்கள் இருவரது தலைகளை மட்டும் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வைத்து விட்டு தலைமறைவானது. மேலும் அக்கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் இரு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார் (34), இவரது தம்பி ராஜேஷ் (32) இருவரும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் குமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு காவலுக்கு இருந்தவர்களை வெடிகுண்டு வீசியும். அரிவாளால் தாக்கினர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் ஆகிய இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர்.
 
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் ஆய்வாளர் பி.முருகானந்தம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல் மற்றும் தலைகளை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடிக்காமல் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்