மு.க.ஸ்டாலின் கனவு தகர்ந்தது - சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

வியாழன், 23 மார்ச் 2017 (12:25 IST)
சபாநாயகருக்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் போதுமான ஆதரவு இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்துள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அதில் ஏற்பட்ட ரகளை காரணமாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  
 
இதன் மூலம் சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டியது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவோம் என ஏற்கனவே திமுக தரப்பு கூறியிருந்தது. அதன்படி, இன்று கேள்வி-பதில் நேரம் முடிந்த பின், எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.கஸ்டாலின், சபாநாயகருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவந்தார்.   
 
இந்த விவாதம் நடைபெற்றும் போது சபாநாயகர் அங்கே இருக்கக் கூடாது என்பதால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை நடத்தி வருகிறார். 
 
அந்நிலையில், மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன்பின் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவில்லை. மேலும்,  போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாத காரணத்தால், மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. 
 
ஆனால், குரல் வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனவே, அந்த முறையிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இறுதியாக, 97 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 122 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எனவே, இந்த தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்