திமுக எதிர்ப்பாளர்களுக்கு நிரந்தர வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின் அறிக்கை

புதன், 17 ஜூலை 2019 (07:02 IST)
அஞ்சல் துறை போட்டி தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என நேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றும், திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண் வாதம் விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப் பூட்டு போடும் என்று நம்புகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் அஞ்சல் துறை வேலைவாய்ப்புகளுக்காக தமிழில் நடைபெற்று வந்த போட்டித்தேர்வுகளை திடீரென ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் நடத்துவோம் என்று சுற்றறிக்கை வெளியானவுடன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு அவைகளிலும் இதுகுறித்து பிரச்சனையை எழுப்பி கடுமையாக எதிர்த்தனர் என்றும், மீண்டும் அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் மற்ற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று தீவிரமான அழுத்தம் கொடுத்து வந்தனர் என்றும், இந்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்து, தமிழ் உட்பட மாநில மொழிகளில் புதிதாக தேர்வு நடத்த உள்ளது என்றும் மு க ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
திராவிடம் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாநில உரிமைகளுக்காகவும் மாநில நலன்களுக்காகவும் தாய்மொழியாம் தமிழுக்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆணித்தரமாக குரல் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்