கேரளாவை போல... தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:13 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் திரைத்துறையினருக்கு சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

 
திரையரங்குகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களின் நலனை கணக்கில் கொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கேரளாவில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதல் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன என்பதும், இன்று முதல் திரையரங்குகள் அங்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள திரையரங்குகளுக்கு மார்ச் மாதம் வரை கேளிக்கை வரி கிடையாது என அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளில் மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்றும் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 
 
கேரள அரசின் இந்த அதிரடி சலுகை காரணமாக அம்மாநில தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் திரைத்துறையினருக்கு மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 
மேலும், திரைத்துறை மட்டுமின்றி, கொரோனா பேரிடர் காலத்தில் பாதிப்பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட்டிடும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்