ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு: திமுகவில் பரபரப்பு காட்சிகள் அரங்கேற இருப்பதாக தகவல்!

புதன், 30 நவம்பர் 2016 (15:18 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை இன்று கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது.


 
 
கட்சிக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வந்த மு.க.அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட காலமாக அவர் இன்னமும் திமுகவில் சேர்க்கப்படவில்லை.
 
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மு.க.அழகிரி அவரை பார்க்க அடிக்கடி வந்தார். 4 முறைக்கு மேல் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்து பேசினார்.
 
இதனையடுத்து இன்று கோபாலபுரத்துக்கு வந்த மு.க.அழகிரி அங்கு தம்பி ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, வேலு ஆகியோர் உடனிருந்தனர். அதன் பின்னர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் தனித்தனியாக கிளம்பி சென்றனர்.
 
இந்நிலையில் அடுத்த மாதம் கூடும் செயற்குழு கூட்டத்தில் முதுமை காரணமாக கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அப்போது அழகிரி குறித்தான முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்