சுடுகாடு மயானத்திற்கு வழிகேட்டு போராட்டம்

புதன், 18 ஆகஸ்ட் 2021 (00:18 IST)
சுடுகாடு மயானத்திற்கு வழிகேட்டு அறவழிப்போராட்டம் நடத்தியவர்களிடையே, மாவட்ட ஆட்சியருடைய மெத்தன போக்கினால் அநியாயமாக ஒரு உயிர் மாயானத்திற்கே சென்ற கொடுமை மற்றொருவர் உயிர் ஊசல் – உயிர்போன பிறகு சம்பந்தப்பட்ட இடத்திற்கு தாமதமாக வந்த கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள். 
 
உங்களை நம்பியதற்கு ஒரு உசுரு போச்சே, பாவம் அவளுடைய தாலி அறுத்திட்டு, பிள்ளைகளை நடுரோட்டிலேயே தவிக்க விட்டுட்டீங்களே கிராம மக்கள் கலெக்டரை சரமாரி கேள்வி
 
இறந்தவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த சம்பவத்தினால் பரபரப்பு 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வேடிச்சிபாளையம் அடுத்த  அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனியாக அந்த கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு முன்னோர் காலத்தில் இருந்து இறந்தவர்களின் உடலை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகலாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை என்றும்,  தனி நபர்கள் 2 பேரின் விவசாய நிலத்தில் செல்லும் வரப்பை பயன்படுத்தி  பின்பு சுடுகாடு செல்ல வேண்டிய நிலை இருந்து வருவதால் எங்களுக்கு சுடுகாட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர். இதனை விசாரித்த மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டுள்ள தனி நபர்கள் இருவரும் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை கொடுக்க முடியாது என கூறி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராம மக்கள் கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக ஆன்லைனில் பதில் கிடைத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அஜாக்கிரதையினால், பலமுறை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு அந்த கிராமத்தை சார்ந்த இளைஞர்களும், ஆண்களும், பெண்களும் சேர்ந்து அப்பகுதியில் சுடுகாட்டிற்கு செல்ல பாதையை ஏற்படுத்த கோரை புல்லை வெட்டியுள்ளனர். அப்போது,  மாற்று சமுதாயத்தை சார்ந்த தனிநபர்கள் அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும்,  தங்களுக்கென்று சுடுகாட்டிற்கு பாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனக் கூறி இளைஞர்கள்,  ஆண்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் சுடுகாட்டிலேயே குடியேறியுள்ளனர். அங்கேயே கிடைக்கும் பொருட்களை எரித்தும் வெளிச்சத்தை ஏற்படுத்தியும், செல்போன் வெளிச்சத்தில் அங்கே உணவு சாப்பிட்டும்,  படுத்த உறங்கியும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இந்த போராட்ட்த்தின் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட வேலுச்சாமி (வயது 45)., என்பவர் காலையில் மயக்கமடைந்து பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த போராட்டத்தினை துளி அளவும் பெரியதாக கருதாத  கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்., இன்று காலையில் 45 வயதான நபர் ஒருவர் இறந்துவிட்ட செய்தி கேட்டு அந்த இடத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது உறவினர்கள் மற்றும் சுடுகாட்டின் மயானத்திற்கு பாதை கேட்டு போராடி வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை பார்த்து, ஐயா உங்களை நம்பியதற்கு ஒரு உசுரு போச்சே, பாவம் அவளுடைய தாலியை அறுத்திட்டீங்களே, அவருடைய பிள்ளைகளையும் மனைவியையும் நடுரோட்டிலேயே தவிக்க விட்டுட்டீங்களே என்று கூறியதோடு, உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.

சுயமரியாதை காக்கும்., திமுக ஆட்சியில் அதுவும் அமைச்சர்களின் காலில் விழுவதையே விரும்பாத திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ஒரு மாவட்ட ஆட்சியர் காலில் விழ வைத்துள்ள சம்பவம் இப்பகுதியில் மட்டுமல்லாமல், தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மயானத்தின் வழிக்காக நீதி கேட்டவர்களில் ஒருவரது உயிர் பிரிந்துள்ளது மற்றொருவர் ( மணி வயது 53) கவலைக்கிடமான சம்பவமும், அதை ஒரு பொருட்டாகவே கருதாக மாவட்ட ஆட்சியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்