மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியதில் திடீர் சர்ச்சை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி பேட்டி

சனி, 20 அக்டோபர் 2018 (22:13 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு நினைவிடம் அமைக்க திமுக தரப்பில் இருந்து மு.க.ஸ்டாலினே நேரடியாக முதல்வரை சந்தித்து மெரீனாவில் இடம் ஒதுக்கி தருமாறு கேட்டார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து திமுக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் மெரீனாவில் கருணாநிதியின் சமாதி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்ட கோப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கையெழுத்திடவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் நானும், அமைச்சர் கடம்பூர் ராஜூவும் மட்டும்தான் கையெழுத்து போட்டுள்ளதாகவும், முதல்வர் கையெழுத்திட்டால் மட்டுமே அந்த கோப்பு இறுதி வடிவம் பெறும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதனால் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் எப்போது வேண்டுமானாலும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்