மு.க.ஸ்டாலின் சர்ட்டிஃபிகெட் தருவார்னு வேலை பாக்கல! – செல்லூரார் காட்டம்!

திங்கள், 22 ஜூன் 2020 (14:46 IST)
தமிழக அரசு கோரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா எப்போது ஒழியும் என கடவுளுக்குதான் தெரியும்” என்று கூறியதற்கு மு.க.ஸ்டாலின் முரண்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மதுரையில் நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ”மக்களிடம் ஊரடங்கை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாவட்டம்தோறும் அதிகாரிகள் கொரோனா பாதிப்பு நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் மு.க.ஸ்டாலின் கருத்து குறித்து பேசிய அவர் “உலக நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், கடவுள் நம்பிக்கை கொண்டவராக முதல்வர் இருப்பதால் கடவுளுக்குதான் தெரியும் என கூறினார். எதிர்கட்சி தலைவர் நற்சான்றிதழ் தர வேண்டும் என்பதற்காக முதல்வர் பணியாற்றவில்லை. முதல்வர் மக்களுக்காக பணியாற்றுகிறார்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்