விமான நிலையத்திற்கு இடம் தந்தால் அரசு வேலை! – அமைச்சரின் அறிவிப்பு!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (10:51 IST)
சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் தருபவர்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்பு பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையம் அமைவதற்காக தங்களது நிலங்களை கொடுக்க அப்பகுதி மக்கள் சிலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு “பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள 13 கிராம மக்களிடமும் சந்தித்து பேசினோம். பலர் நிலத்திற்கு அரசின் நிர்ணயத்தை விட கூடுதல் தொகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விமான தளத்தின் ஓடுபாதையை மாற்றி அமைத்தால் 500 வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்கலாம் என சிலர் கூறினர். இதுகுறித்து ஆய்வு செய்ய விரிவான திட்ட அறிக்கை அளித்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கு இடம் தருபவர்களுக்கு நில மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிக பணம் அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதோடு புதிதாக வேறொரு நிலமும், அதில் வீடுக்கட்டிக் கொள்ள பணமும் அரசால் அளிக்கப்படும். இதுதவிர வீட்டிற்கு ஒரு படித்த நபருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்