ஸ்டாலின் என்னை அடிக்கவில்லை: கல்லூரி மாணவர் விளக்கம்

வெள்ளி, 3 ஜூலை 2015 (10:38 IST)
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது, ஸ்டாலின் அங்கிள் என்னை அடிக்கவில்லை என்று கல்லூரி மாணவர் கார்த்தி ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
 
மெட்ரோ ரயில் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பயணிகளுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
 
அப்போது பயணி ஒருவரை மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோ காட்சிகளும் பரவின. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த மு.க.ஸ்டாலின், "மெட்ரோ ரயில் பயணத்தின் போது பொதுப்பணிதுறை பெண் ஊழியர் ஒருவருக்கு இடையூறாக நின்ற ஒருவரை கண்டித்து நகர்ந்து நிற்க சொன்னேன்.
 
அப்போது எனது கை அவர் மீது பட்டது உண்மைதான் ஆனால் நான் அவரை அடிக்கவில்லை. இதனை சில சக்திகள் தவறாக சித்தரித்து வீண் பிரசாரம் செய்கிறார்கள்" என்று விளக்கம் அளித்தார்.
 
இந்நிலையில் ஸ்டாலின் கன்னத்தில் அடித்ததாக கூறப்பட்ட வாலிபர், கிண்டி மருவாங்கரையைச் சேர்ந்தவ கார்த்திக் என்பது தெரியவந்தது.
 
அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் அவர் ரயில் பயணத்தின் போது, ஸ்டாலின் தன்னை அடிக்கவில்லை என்றும் விலகி நிற்கவே சொன்னார் என்றும், விளக்கம் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக கார்த்திக் கூறியதாவது:–
 
மெட்ரோ ரயில் பயணத்தின்போது ஸ்டாலின் அங்கிளைப் பார்த்ததும் அவர் அருகில் மெய்மறந்து நின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பெண்ணின் காலை மிதித்து விட்டேன்.
 
அப்போது, அவர் என்னை பார்த்து அந்த பக்கமா போப்பா என்று கூறி சைகை காட்டினார். அப்போது எனது கன்னத்தில் அவரது கை பட்டு விட்டது. ஸ்டாலின் அங்கிள் என்னை அடிக்கவில்லை.
 
ஆனால் அவரது பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் மது அருந்தி இருந்ததாகவும் பொய்யான தகவல்களை பரப்பி விட்டனர்.
 
எனது தந்தை ராஜேந்திரன் திமுக வில் தீவிர ஈடுபாட்டுடன் கட்சி பணியாற்றி வந்தவர். கிண்டி ராஜேந்திரன் என்று அவர் அழைக்கப்பட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார். நானும் திமுக வில் ஈடுபாட்டுடனேயே செயல்பட்டு வருகிறேன். ஸ்டாலினை எனது ரோல் மாடலாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்