என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம்

ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (17:57 IST)
கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி தொடங்கும் பிரச்சினையில் மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.


 


இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வாங்கல் குப்புச்சி பாளையம் ஊராட்சியில் அமைக்க முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 12.8.2014 அன்று சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் இதற்காக 19.1.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

30.11.2015 அன்று ரூ.229 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, டெண்டர் முடிக்கப்பட்டு 1.3.2016 அன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் மருத்துவ கல்லூரிக்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அரசாணை வெளியிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை தொடங்க விடாமல் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

கரூர் மாவட்ட கலெக்டரின் அரசாணை எண் 352-ன்படி வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வருகிற 28 ஆம் தேதி காலை 9 மணி முதல் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடை பெறும். ஒரு வேலை போலிஸ் அனுமதி மறுத்தால் தடையை மீறி என் உயிரை கொடுத்தாவது கரூருக்கு இந்த மருத்துவ கல்லூரி இந்த திட்டத்தை கொண்டுவருவேன்.  

வெப்துனியாவைப் படிக்கவும்