மவுலிவாக்கம் கட்டட விபத்து: மத்திய மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (09:21 IST)
மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ரெகுபதி ஒருநபர் கமிஷன், தனது அறிக்கையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜாராமன் ஆகியோர் மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்