மவுலிவாக்கம் கட்டட விபத்து: வீடு வாங்கியவர்கள் சங்கம் துவங்கி கோரிக்கை

திங்கள், 21 ஜூலை 2014 (13:52 IST)
சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த கட்டடத்தில் வீடுகளை வாங்க பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து தற்போது கடனாளிகளாக ஆகியிருப்போர் சேர்ந்து சங்கம் ஒன்றை துவக்கி உள்ளனர்.
 
நேற்று மாலை, விபத்து நடந்த பகுதியில் ஒன்று திரண்ட வீடு வாங்க பணம் செலுத்தியோர் அனைவரும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது, எங்களுக்காக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
அடுக்குமாடி குடியிருப்பை பணம் கட்டி வாங்கிய நாங்கள், என்ன செய்வதென்று தெரியாமல் தற்போது புதிதாக ஒரு சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பை 72 பேர் வாங்கி உள்ளனர். அதில் 53 பேர் இந்த சங்கத்தில் இணைந்து உள்ளனர். மற்றவர்கள் வெளியூர்களில் உள்ளனர்.
 
இந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியவர்கள் நிலங்களை விற்றும், வங்கியில் கடன் வாங்கியும்தான் பணத்தை கொடுத்து உள்ளோம். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்தில் தொடங்கி ரூ.80 லட்சம் வரையில் உள்ளது. இதில் சிலர் முழுதொகையையும் கட்டிவிட்டனர். சிலர் வங்கியில் கடன் வாங்கி கட்டி உள்ளனர். தற்போது வங்கியில் வாங்கிய கடனுக்கு பணம் கட்ட வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். நாங்கள் ஏற்கனவே மன உளைச்சலில் உள்ளோம். எங்களுக்குக் கிடைக்காத வீட்டுக்காக நாங்கள் எப்படி பணம் கட்ட முடியும்.
 
இதனால் நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனத்திடம் இருந்து எங்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கவனத்துக்கு வைக்கிறோம்.
 
அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை குழுவில் எங்களது கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்