கல்வித்துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன்: கடந்து வந்த பாதை!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (10:08 IST)
ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாஃபா பாண்டியராஜனை நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அறிவித்தார். இந்நிலையில் அரசியலில் மாஃபா பாண்டியராஜன் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு சிறிய அலசல்.


 
 
1959-இல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்த மாஃபா பாண்டியராஜன் சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் சிவகாசி தீப்பட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தவாறே பள்ளியில் படித்து வந்தார். அய்யாநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.யு.சி படிப்பை நிறைவு செய்தார்.
 
பின்னர் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் பட்டத்தையும், ஜாம்ஷெட்பூரில் உள்ள புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ பட்டத்தையும் பெற்றார். மனிதவள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்த அவர் 1992-இல் சிறிய அளவிலான முதலீட்டோடு மாஃபா என்ற ஐ.டி நிறுவனத்தை தொடங்கினார்.
 
இதன் மூலம் லட்சக்கனக்கான பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். 60000 முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மதிப்பு 2010-இல் 1000 கோடியாக உயர்ந்தது.
 
அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் மாஃபா பாண்டியராஜன் சேர்ந்த கட்சி பாஜக ஆகும். அந்த சமயத்தில் விஜயகாந்தின் வளர்ச்சியை கண்டு பாஜகவில் இருந்து விலகிய அவர் தேமுதிகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
 
விஜயகாந்தின் ஆலோசகராக இருந்த அவர், 2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தேமுதிக சார்பாக விருதுநகர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுதே சட்டமன்றத்தில் புள்ளி விவரங்களோடு பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதல்வர் ஜெயலலிதாவே அப்பொழுது அவரது பேச்சின் நடுவே குறுக்கிட்டு விளக்கமளித்தார்.
 
இதனால் சட்டமன்றத்தில் நீங்கள் புள்ளி விவரங்களோடு பேச்சக்கூடாது என விஜயகாந்த் அவரை கடிந்து கொண்டதாலும், ஒரு சில மன கசப்பாலும் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.வாக மாறினார் மாஃபா பாண்டியராஜன்.
 
2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்த தேமுதிகவின் அதிமுக நிலைப்பாடு எம்.எல்.ஏ.க்களில் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டுமே மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.
 
இவருக்கு ஒதுக்கப்பட்ட ஆவடி தொகுதியில் திமுகவின் பலம் ஓங்கி இருந்த போதும் தனது சகாக்களுடன் ஆலோசித்து “மை ஆவடி” என்ற செயலியை உருவாக்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
 
சட்டமன்ற தொடக்கத்தில் இருந்தே மாஃபா பாண்டியராஜன் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஜெயலலிதா கவனித்து வந்தார். அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டிய சில இடங்களில் மாஃபா பாண்டியராஜன் எழுந்து புள்ளி விவரங்களோடு பதில் அளித்து அசத்தினார்.
 
திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசிய போது கம்பீரமாக எழுந்து அவரது கேள்விகளுக்கு மாஃபா பாண்டியராஜன் ஆங்கிலத்தில் புள்ளி விவரங்களோடு விளக்கமளித்தார். கடந்த வாரம் ஜி.எஸ்.டி மசோதாவை தமிழக அரசு ஏன் எதிர்கிறது எனவும், இந்த மசோதாவினால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அடையும் ஆதாயங்கள் என்ன எனவும் உரையாற்றினார். இப்படி கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் கோல் அடித்த மாஃபா பாண்டியராஜன் ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடித்தார்.
 
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமினின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் படியாக இல்லாததால் முதல்வர் ஜெயலலிதாவால் அந்த துறைக்கு மாஃபா பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்