1000 ரூபாய் செலவில் அபூர்வ கருவி: அரை மணி நேரத்தில் குழந்தையை மீட்கலாம்

சனி, 2 நவம்பர் 2019 (08:58 IST)
சமீபத்தில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில் இந்த குழந்தையை மீட்க பல லட்சம் செலவு செய்தும் உயிருடன் மீட்க முடியவில்லை. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் ரூ.1000 செலவில் ஒரு அபூர்வ கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் மீட்கலாம் என்று அவர் டெமோ செய்தும் காண்பித்துள்ளார். 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரம் என்ற பகுதியை சேர்ந்த மாணவர் முருகன் என்பவர் சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வம் உள்ளவர். சுஜித் என்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானதை அடுத்து இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் செய்த முயற்சியில்தான் தற்போது இந்த புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
மிக எளிமையாக கையாளக்கூடிய இந்த கருவியின் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் வெளியே எடுத்துவிடலாம் என்றும் இதற்கான செய்முறை விளக்கத்திற்காக ஒரு குழந்தை எடையுள்ள பொம்மையை குழிக்குள் இறக்கி இந்த கருவி மூலம் அந்த பொம்மையை தூக்கி தனது கருவி தரமானது என்பதை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்தார். மேலும் இந்த கருவியால் 600 அடியில் குழந்தை விழுந்திருந்தாலும் மீட்கலாம் என்றும் அவர் கூறினார்.
 
இந்த கருவியை தமிழக அரசு உரிய அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து அந்த இளைஞரை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த கருவியை எதிர்காலத்தில் மீட்புப்படையினர் பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்