தோசை மாவு வாங்கினால் தங்க நாணயம் இலவசம்: மதுரை வியாபாரியின் அசத்தல் திட்டம்

வியாழன், 21 நவம்பர் 2019 (08:35 IST)
நம்முடைய பாட்டி காலத்தில் இட்லி மாவை உரலில் அரைத்து வந்தார்கள். நம்முடைய அம்மா காலத்தில் இட்லி, தோசை மாவு கிரைண்டரில் அரைத்து வந்தார்கள். ஆனால் தற்போதைய அவசர காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிரைண்டர் இருந்தாலும் இட்லி தோசை மாவுகளை வெளியே வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதையே முழுநேர தொழிலாக செய்ய பலர் தொடங்கிவிட்டதால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இட்லி தோசை மாவு கடைகள் பெருகி வருகின்றன.
 
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக இட்லி தோசை மாவுகளை விற்பனை செய்து வருகிறார். மதுரையில் பல இடங்களில் கிளைகள் வைத்திருக்கும் இவர் தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஒரு சலுகையை அறிவித்துள்ளார்.
 
அதன்படி இட்லி, தோசை மாவு வாங்குபவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு 10 நாட்களுக்கு ஒரு முறை குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 10 நபர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசம் என்ற அறிவிப்பு செய்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் மதுரையின் முக்கிய பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்புக்குப் பின்னர் இவருடைய கடையில் இரண்டு மடங்கு வியாபாரம் அதிகரித்துள்ளதாகவும் ஒவ்வொரு பத்து நாட்களுக்கு ஒருமுறை குலுக்கலில் தேர்வு  தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தங்க நாணயமும் கொடுத்து அதன் புகைப்படங்களையும் அவர் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த சலுகை திட்டம் காரணமாக அவரது கடையில் இருமடங்கு வியாபாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
 
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாவு விற்பனை வியாபாரி ஒருவர் தங்க நாணயம் வழங்கும் இந்த திட்டம் மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்