தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில், மு.க அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (10:09 IST)
மதுரை மேலூரில் தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி அக்டோபர் 27 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலின்போது, மு.க.அழகிரி முக்கியப் பிரமுகர்களை அம்பலகாரன் பட்டியில் உள்ள வல்லடையார் சுவாமி கோயில் வளாகத்தில் சந்தித்தார்.

இந்த நிகழ்வை, தேர்தல் அலுவலரும் மேலூர் வட்டாட்சியருமான காளிமுத்து விடியோ கிராபர் கண்ணனை வைத்து படம் பிடித்தார்.

இதை ஆட்சேபித்த திமுகவினருக்கும் வட்டாட்சியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தான் தாக்கப்பட்டதாக கீழையூர் காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் காளிமுத்து புகார் செய்தார்.

இதில், மு.க.அழகிரி, மேலூர் ஒன்றியச் செயலர் ரகுபதி, அப்போதைய மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 21 பேர் மீது மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி முன் நடைபெற்றது. திமுக தரப்பில் வழக்குரைஞர்கள் எஸ்.மோகன்குமார், வெ.எழிலரசு தலைமையில் பலர் ஆஜராயினர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ரகுபதி, வெள்ளையன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராயினர். விசாரணையை அக்டோபர் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி மு.க.அழகிரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்