மதுரையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

செவ்வாய், 31 மார்ச் 2015 (11:04 IST)
மதுரை மருத்துவமனையில் அரசு பள்ளி ஆசிரியரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.


 


மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அகம்மது. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாஜிதா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 
இந்நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சாஜிதாவுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையில் மீண்டும் தம்பதியினர் குழந்தை பெற விரும்பினர். ஆனால் அவருக்கு தவறான கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததால் இயற்கை முறையில் குழந்தை பிறக்காது என கூறப்பட்டது.
 
இதன் பின் செயற்கை கருத்தரிப்பு மூலம் சாஜிதா கருவுற்றார். பிரசவத்திற்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாஜிதாவிற்கு நேற்று காலை 11 மணி அளவில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தன.
 
இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் கூறுகையில், "பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சாஜிதாவிற்கு 4 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன.
 
ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 1 கிலோ 500 கிராம் எடை உள்ளன. இதில் 2 குழந்தைகளுக்கு மட்டும் சற்று மூச்சுத்திணறல் உள்ளது. இதனால் 2 குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் தாயும் ஆரோக்கியமாக உள்ளார்.
 
இந்த மருத்துவமனையில் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தது இதுவே முதல் முறை ஆகும்" இவ்வாறு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்