மதுரையில் நேற்று 15 வயது மாணவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிற குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
11.07.2024 அன்று காலை 08.00 மணிக்கு மதுரை மாநகர், சி3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலை று ய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் தெருவில் வசித்து வரும் ராஜலெட்சுமி என்பவரின் 14 வயதுடைய மகன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பதாகவும், அவர் வீட்டிலிருந்து அருகிலுள்ள பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் போது, ஆட்டோவை பின் தொடர்ந்து ஆம்னி வேனில் வந்த நான்கு நபர்கள் ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவிலிருந்த சிறுவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் மேற்படி ஆம்னி வேனில் ஏற்றி, இருவரையும் கடத்தி சென்றனர்.
அதன்பின், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் இருந்து வீடியோ காலில் கடத்தப்பட்ட சிறுவனின் தாயாரை தொடர்பு கொண்டு அவரது மகனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டுமானால் ரூபாய் 2 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்றும், விரைவில் பணத்தை தயார் செய்து கொண்டு தாங்கள் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்றும் இல்லையெனில் கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.
கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர அனைத்து காவல் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் மற்றும் அருகிலுள்ள மாவட்ட காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டு, உஷார்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை கடத்திய நபர்களின் இருப்பிடத்திற்கு காவல்துறையினர் நெருங்குவதை அறிந்த மேற்படி நபர்கள் கடத்திய சிறுவனையும் ஆட்டோ டிரைவரை மதுரை மாவட்டம், செக்கானூரணி, கின்னிமங்கலம் அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து கடத்திய வாகனத்துடன் தப்பித்து சென்றுள்ளனர். மேலும், இதுசம்பந்தமாக சி3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி கடத்தலில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற எதிரிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
கடத்தப்பட்ட சிறுவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் துரிதமாக செயல்பட்டு 3 மணி நேரத்திற்குள் மீட்ட தனிப்படை காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.