சமீப காலமாக நாடு முழுவதும் நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கைகளால் பலர் பலி கொடுக்கப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தம்பதியர் இருவர் ஒரு மந்திரவாதியுடன் சேர்ந்து பெண்கள் சிலரை கொன்று நரபலி கொடுத்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அப்படியொரு சம்பவத்தில் இருந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தப்பித்து தமிழ்நாட்டில் வந்து தஞ்சமடைந்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி சர்மா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது தாய் மாந்திரீகம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளில் நாட்டம் கொண்டவராக இருந்து வருவதாகவும், கடந்த காலங்களில் தனது 10 வயது சகோதரன் உள்ளிட்ட இருவரை தனது தாய் நரபலி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னையும் நரபலி கொடுக்க அவர் முயன்றதாகவும், அவரிடமிருந்து தப்பி வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து மத்திய பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அவர்கள் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இளம்பெண்ணை தாயே நரபலி கொடுக்க திட்டமிட்டதும், இளம்பெண் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.