நின்றிருந்த வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி : தூத்துக்குடி அருகே பயங்கரம்

திங்கள், 9 மே 2016 (11:50 IST)
நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


 
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் வசிக்கும் வெற்றிவேல்(25), தனது உறவினர்கள் 15 பேருடன் நேற்று தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள கொண்டயன்பச்சேரி கிராமத்தை சேர்ந்த உறவினர் ஒருவரின் வீட்டிற்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வேனில் சென்றுள்ளார்.
 
அதில் கலந்துகொண்ட பின்பு, நேற்று இரவு அவர்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலகரந்தை விலக்கு அருகே அவர்களது வேன் சென்று கொண்டிருந்த போது, திடீர் என டயர் பஞ்சரானது.
 
இதனால், வேனை ஓரமாக நிறுத்திய டிரைவர் பாலமுருகன், புதிய டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். வேனில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி நிலக்கரி ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக, அந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.
 
இதில் ஏற்பட்ட விபத்தில் அந்த வேனில் இருந்த ஒரு வயது ஆண் குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் அந்த வேனின் டிரைவர் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். 
 
இதுபற்றி தகவல் அறிந்ததும், அங்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 9 பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
லாரியை ஓட்டி வந்த டிரைவர் தூங்கியதால் அந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் விபத்தில் பலியானவர்களின் சொந்த ஊரான இருக்கன்குடி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்