மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ்

வெள்ளி, 3 ஜூலை 2015 (03:00 IST)
நம்பிக்கை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் சரண்டைந்தார்.
 
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தின்  விநியோக உரிமை கடந்த 2001 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். படத் தயாரிப்பாளரான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், குறிப்பிட்ட தொகையை தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், அந்தப் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார் என மாரியம்மாள், திருவில்லிபுத்தூர் ஜேஎம் 2 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதில், இவருக்கும் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோருக்கும் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தப்படி நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.29 லட்சத்திற்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றுள்ளதால், இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால், நஷ்டமான பணத்தை விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோரிடம் மாரியம்மாள் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால், இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் மீது மாரியம்மாள் வழக்கு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி விஜயகாந்த், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், எல்.கே.சுதீஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், நீதிமன்றம் இவருக்கு ஏப்ரல் 10 ஆம்  தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.
 
இதனையடுத்து, நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்னிலையில் எல்.கே.சுதீஷ் ஆஜராகி, பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்திரவிட்டார். இதனையடுத்து ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. இதனால் எல்.கே.சுதீஷ் மீது இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
 
இந்நிலையில், திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் எல்.கே.சுதீஷ் சரணடைந்தார். இதனையடுத்து அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்