தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் உடனடியாக அடுத்த நாளே அடக்கம் செய்யப்பட்டது. 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அப்பல்லோ அறிக்கைகள் தெரிவித்துவந்தன. ஆனால் திடீரென நவம்பர் 4ம் தேதி முதல்வருக்கு மாரடைப்பு என்றும், 5ம் தேதி இரவு அவர் மரணம் அடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில் லெஜியன்(#Legion) என்ற ஹேக்கர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனை சர்வரில் புகுந்து ஜெயலலிதா குறித்தான தகவல்களை திருடியுள்ளதாக கூறியுள்ளது. இந்த லெஜியன் ஹேக்கர்கள் இதற்கு முன்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா போன்றோரின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்தவர்கள். தற்போது அப்பல்லோ சர்வரில் புகுந்து ஜெயலலிதா குறித்த தகவல்களை திருடியுள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் லெஜியன் ஹேக்கர்கள் குழு அளித்த பேட்டியில் கூறியுள்ளது.
அப்பல்லோ சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்ததில் பாதிக்கும் மேற்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. அப்பல்லோ சர்வரில் கிடைத்த தகவல்களில் ஜெயலலிதா குறித்தான பல தகவல்கள் உள்ளன எனவும் அவற்றை வெளியிட்டால் இந்தியாவில் குழப்பம் ஏற்படும் எனவும், அதனால் அந்த தகவல்களை வெளியிடவில்லை என்வும் அந்த ஹேக்கர்கள் குழு உறுப்பினர் பேட்டியளித்துள்ளார்.