இல்லாத வேலையை வாங்கி தருவதாக பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கில் மோசடி

திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (09:26 IST)
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி ஏராளமானோரிடமிருந்து லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
 

 
கோவை, வடவள்ளி சாலையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதிலும் 14 இணைப்புக் கல்லூரிகளும், 13க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இதில், சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி அணுகிய உடுமலைப்பேட்டை வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த மா.செந்தில்குமார் என்பவர், தான் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை தகவல் பணியாளர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான பணி நியமன ஆணையைக் காட்டியுள்ளார்.
 
பல்கலைக்கழகத்தில் அப்படி ஒரு பணியே இல்லை என்பதால் குழப்பமடைந்த அதிகாரிகள், அவர் வைத்திருந்த பணி நியமன ஆணையை வாங்கிப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
பல்கலைக்கழகத்தின் பெயரில் சிலர் போலியான பணி நியமன ஆணை தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்