இது சம்மந்தமாக எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானத்திற்கு வழியின்றித் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு, அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு மூட்டை சிமெண்ட் 370 முதல் 390 ரூபாய் வரையில்தான் உள்ளது. தலைநகர் டெல்லியில் கூட, ஒரு மூட்டை சிமெண்ட் 350 ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாய்க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிமெண்ட் விலையைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும், அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் எம்.சாண்டின் விலை, இப்போது 6,000 ரூபாய்க்கும் அதிகமாகப் போய்விட்டது. ஒரு யூனிட் ஜல்லி (முக்கால் இஞ்ச்) 3,600 ரூபாயாக இருந்தது. அது இப்போது 4,200 ரூபாய்க்கும் மேல் சென்றுவிட்டது. கட்டிடங்கள் கட்டப் பயன்படும் கம்பி விலையானது, திமுக ஆட்சிக்கு முன்பு ஒரு டன் 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 75,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஒரு லோடு செங்கல் 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 24 ஆயிரம் ரூபாயைக் கடந்து சென்றுவிட்டது. அதாவது, 2012-ம் ஆண்டு ஒரு லோடு செங்கல் விலை 9,500 ரூபாயாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் அது படிப்படியாக உயர்ந்து 18,000 ரூபாயாக ஆனது. ஆனால், கடந்த ஒரே மாதத்தில் ஒரு லோடு செங்கல் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது, மூட்டைக்கு 180 ரூபாயாக இருந்த சிமெண்ட்டின் விலை, படிப்படியாக உயர்ந்து 2008-ம் ஆண்டு 280 ரூபாயைத் தொட்டது. இதனால் அப்போது கட்டுமான திட்டங்கள் அனைத்தும் முடங்கின.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, 'சிமெண்ட் ஆலைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்' என்று அறிவித்தார். அதன்பிறகு, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியின்போதும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது விலையை உயர்த்தினார்கள். ஆனால், அரசுத் தரப்பில் கிடுக்கிப்பிடி போட்டதால் விலை கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. இந்த நிலையில், மீண்டும், திமுக ஆட்சி அமைந்ததும் அதிரடியாக சிமெண்ட் விலையை அதிக அளவு உயர்த்தி உள்ளார்கள். ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கையை அவரது மகனாகிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை