பாரத மாதா சமத்துவ திருக்கோயில் கட்டக் கோரி ஜூலை 23-ல் குமரி அனந்தன் உண்ணாவிரதம்

திங்கள், 11 ஜூலை 2016 (19:31 IST)
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சமத்துவ திருக்கோயில் கட்டக் கோரி ஜூலை 23-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் தெரிவித்தார்.


 

 
இது குறித்து அரூரில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: இந்தியாவில் அனைத்து ஜாதி, மதத்தினரும் ஒற்றுமையுடன், சமத்துவமாக வாழ வேண்டும், வழிபட வேண்டும் என தியாகி சுப்பிரமணிய சிவா விரும்பினார். இதற்காக தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் 7.50 ஏக்கர் நிலத்தினை வாங்கினார். இந்த இடத்தில் பாரத மாதா சமத்துவ திருக்கோயில் அமைய வேண்டும் என்பதே சுப்பிரமணிய சிவாவின் கனவு. 
 
அவரது கனவுகள் மெய்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து நான் 1978, 2001, 2008, 2011 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் பல நூறு கிலோ மீட்டர் தூரம், அனைத்து ஜாதி, மதத்தினரையும் ஒன்று திரட்டி நடைப்பயணம் மேற்கொண்டேன்.  ஆனால் தமிழக அரசு பாரத மாதாவுக்கு கோயில் எழுப்பும் பணிகளை தொடங்கவில்லை. பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் அரசு சார்பில் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் எழுப்ப வேண்டும், அல்லது பொதுமக்கள் சார்பில் இந்த கோயில் எழுப்புவதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2015-ல் உத்தரவிட்டது.  
 
நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் ஆகியும் தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சமத்துவ திருக்கோயில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 23-ம் தேதி, பாப்பாரப்பட்டியில் எனது (குமரி அனந்தன்) தலைமையில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் பொதுமக்களை ஒன்று திரட்டி ஒருநாள் விண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்