பாசனத்திற்காக கிருஷ்ணகிரி–கெலவரபள்ளி அணைகளைத் திறக்க உத்தரவு

திங்கள், 27 ஜூலை 2015 (07:47 IST)
பாசனத்திற்காக கிருஷ்ணகிரி – கெலவரபள்ளி அணைகள் இன்று திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
இது குறித்த முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
 
அதனை ஏற்று, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய் வாயிலாக முதல் போக பாசனத்திற்காக நாளை (இன்று 27 ஆம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
 
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கப் பாசன அமைப்பின்கீழ் உள்ள 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கெலவரபள்ளி அணையிலிருந்து வலது, இடது பிரதானக் கால்வாய் வாயிலாக முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன.
 
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த அணையிலிருந்தும் முதல் போக பாசனத்துக்காக திங்கள்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், தமிழக அரசிடமிருந்து, இந்த உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றார். இதையடுத்து இன்று மதியம், 12 மணியளவில், கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணைகளில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்