கிருஷ்ணகிரி சாலை விபத்து : 8 பேர் பலி; 33 பேர் படுகாயம்

ஞாயிறு, 24 ஜூலை 2016 (16:49 IST)
கிருஷ்ணகிரி – சூளகிரி அருகே கண்டெய்னர் லாரியும் - தனியார் பேருந்தும் மோதி விபத்து நேரிட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். 


 

 
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறில் கன்டெய்னர் லாரியும் - தனியார் பேருந்தும் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் இருந்து  ஓசூர் சென்ற தனியார் பேருந்து மீது, எதிரே வந்த, கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மோதியது. இந்த கோர விபத்தில், சம்ப இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
விபத்தில் 33 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்து நேரிட்ட பகுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் கதிரவன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். 


 

 
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்புவதற்காக 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜூன் 3ம் தேதி ஓசூர் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, பஸ் மற்றும் கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள், 27 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது கிருஷ்ணகிரி அருகே மீண்டும் அதுபோன்ற கோர விபத்து நேரிட்டுள்ளது. இது இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் தவறால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராமகிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி காயமடைந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் உயர்நிலை மருத்துவக்குழுவினரின் மூலம் உயர் சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், வருங்காலங்களில் இதுபோன்ற விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்