தமிழ்நாட்டில் பிரபலமாகி வரும் கொரிய நாட்டு உணவுகள்

வியாழன், 7 ஜூலை 2016 (20:17 IST)
சீன, பர்மிய, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றறியப்பட்ட நிலையில், சென்னையிலும், தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் கொரிய உணவுகள் பிரபலமாகியுள்ளன.
 

 
பொதுவாக கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றால், சீன உணவு, பர்மிய உணவு, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் என்று பொதுவாக அறியப்பட்ட நிலையில், கொரிய உணவுகள் சென்னையிலும் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பிரபலமாகியிருக்கின்றன.
 
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறும் கொரிய நாட்டவர்களால் தான் கொரிய உணவு தமிழ் நாட்டுக்கு வந்தது என்று கருதப்படுகிறது.
 
தென் கொரிய கார் நிறுவனமான ஹ்யுண்டாய் போன்ற நிறுவனங்கள் சென்னை வந்த போது, அதில் வேலை செய்ய வந்த கொரியர்களுக்காக முதலில் இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் காலப்போக்கில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொரிய உணவகங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.
 
சென்னையில் முக்கிய பகுதிகளில் கொரிய உணவு கூடங்கள் உள்ளன, அதே சமயம் அதிக அளவிலான பிரத்தியேக கொரிய உணவு கூடங்கள் சென்னையின் புறநகரான ஸ்ரீபெரம்புதூர் பகுதியில் காணப்படுகின்றன.
 
பன்றி, மாடு, நத்தை, பட்டுப்புழு, வாத்து, கடலின உயிரினங்கள் போன்றவை கொரிய அசைவ உணவு வகைகளில் பிரசித்தி பெற்றவை என அதன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
 
'கிம்ச்சி பொக்கும்பாப்' (Kimchi-bokkeumbap) என அழைக்கப்படும் பிரைட்ரைஸ் உணவு வகையும், கடலின உயிரினங்களான ஆக்டோபஸ் மற்றும் ஸ்குய்ட் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் 'ஹமல் பஜென்' (Haemul-pajeon] என்கிற பான் கேக் போன்ற வகை உணவுகளையும் சென்னை உள்ளூர் வாசிகள் அதிகம் உட்கொள்வதாக கொரிய உணவு சமையற் கலைஞர் ஒருவர் கூறுகிறார்.
 
சென்னையில் பிரத்யேக உணவு கூடம் தொடங்கவே இந்தியாவில் குடியேறியுள்ளதாக கூறுகிறார் கொரிய நாட்டு இளைஞரான மின் குவாக்.
 
இந்தியாவில் சீன, இத்தாலிய உணவு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது போல, கொரிய உணவு வகைகளும் பெரிய வரவேற்பை பெரும் என்கிற நம்பிக்கை உள்ளது என்கிறார் மின் குவாக்.

வெப்துனியாவைப் படிக்கவும்